பிரகடனமும் சபதமும் !!!!!
இன்றைய தினமானது, உணர்வுள்ள தமிழ் மக்களால் உன்னதங்களை நேசிக்கும் தினமாகும். எம் இனத்தின் விடிவுக்காய் பெறுதற்கரிய இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களை எண்ணித் தொழுதல் எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

மரணத்திற்கு முன்னும், மரணத்தின் போதும் ஒவ்வொரு மானிட ஜாதியும் எதிர்பார்ப்புகளோடும் ஆசைகளோடும் தம் வாழ்வை முடித்துக்கொள்வது ஜதார்த்தம். எம் மாவீரர்களோ வாழ்க்கையின் எந்த வளமான ஆசைகளைளோ எதிர்பார்ப்புகளையோ மையப்படுத்தாது 'என்றோ ஒரு நாள் இந்த தமிழ் சாதியினர் சுதந்திர தமிழீழத்தில் தம் வாழ்வியலை காலம் காலமாக வாழ்வார்கள்' என்ற நம்பிக்கையில் மரணத்தின் இறுதி மூச்சை விட்டிருந்தார்கள் என்பதை ஒரு கணம் எம் மனக்கண்முன் நிறுத்திப்பார்ப்போமா? அந்த மாவீரர்களது கனவை நனவாக்க வேண்டிய கடமை தமிழராகிய ஒவ்வொருவருக்கும் உண்டென்பது வாஸ்தவம்.

தந்தை செல்வநாயகத்தால் அறவழிகளில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களும் அறவழிப்போர்களும் சிங்கள அரசுகளின் மனங்களை மாற்றவில்லை. அதனைத்தொடர்ந்து வட்டுக்கோட்டைத்தொகுதியில் பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியலயத்தில் எடுக்கப்பட்ட தீர்மனமானங்களானதுமக்களால் வழங்கப்பட்ட ஆணையாகும்.

அறப்போரினால் வெற்றிகொள்ள முடியாதென்பதை உணர்ந்து வேறுவழியின்றி மறப்போர் தான் ஒரே வழியென(சிங்கள அரசினால் எம்மீது திணிக்கப்பட்டது) தமிழ் மக்களால் பிரகடனப்படுத்தப்பட்டதென்பதை சர்வதேச உலகம் உணர்ந்துகொள்ளல் அவசியம்.

இட்ட பணியை செவ்வனே காவிவந்த விடுதலைப்புலிகள் எம்மினத்திற்கு அரணாகவும் சர்வதேசத்தில் எமக்கான ஒரு இடத்தை உருவாக்கிவிட்டு தற்காலிகமாக மௌனித்துவிட்டார்கள். இந்த மௌனம் வெகுவிரைவில் கலையுமென்பதில் ஐயமில்லை.

விலைபோகாத் தலைமையான விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரனால் எமக்கு கட்டப்பட்டிருந்த அரண் தற்பொழுது சாய்ந்ததான தோற்றத்தை கண்டிருந்தாலும் மீளவும் கட்டப்படும் என்ற நம்பிக்கை உறுதியாக உண்டு. போர்க்காலத்தை விடவும் போர் ஓய்ந்த இக்காலத்தில் தான் 'தமிழீழம்' என்கின்ற அந்த சுதந்திர சொர்க்கம் மிக அண்மையில் இருப்பது எமக்கு தெளிவாக தெரிகிறது.

இதன் திசையையும் தடத்தையும் மாற்ற பல்வேறுபட்ட மாற்று சக்திகள் முளைவிடத்தொடங்கியதும் இக்காலத்தில் தான். இந்த விடயத்தில்தான் பொதுமக்களாகிய அனைவரும் மிக அவதானமாக இருத்தல் அவசியம். இதற்கான ஒரே வழி மாற்று சக்திகளின் பொய்ப்பிரசாரங்களுக்கு சாவுமணி அடிப்பதோடு தமிழர்களாகிய நாம் பேதங்கள் அனைத்தையும் மறந்து தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற குடையின் கீழ் அனைவரும் ஒன்றுபடுவோம். இதுவே மாவீரர் தினமாகிய இன்று நாம் பிரகடனப்படுத்தும் செய்தியும் எடுத்துக்கொள்ளும் சபதமும் ஆகட்டும்.



தணல்

(கருத்துச்சுதந்திரத்துக்கான இணையத்தளம்)

ஆசிரியர்கள்
Basel 19 Jan 2010
Thanal


<<வாசலுக்கு

Content Management Powered by UTF-8 CuteNews