பொது எதிரியா? புது எதிரியா?
எந்த முறையும் இல்லாதவாறு இம்முறை நடைபெற இருக்கும் ஜனாதிபதித்தேர்தல் பல புதுமைகளையும் உடைக்கப்பட்ட மர்மங்களையும் காண இருக்கிறது. கடந்த ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காமையால் ஒரு ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டார். தற்பொழுது நடக்க இருக்கும் ஜனாதிபதித் தேர்தலில்(2010) தமிழ் மக்கள் வாக்களிப்பதனால் ஒரு ஜனாதிபதி தேர்வுசெய்யப்பட இருக்கிறார். மொத்தத்தில் தமிழ் மக்களின் வாக்களிப்பிலே ஜனாதிபதித் தெரிவு தங்கி நிற்பதை அறியக்கூடியதாக உள்ளது. இந்த இடத்தில் தமிழ் மக்கள் மிக நிதானமாக சிந்தித்து தம் வாக்குகளை வழங்கி எந்த எதிரியை ஜனாதிபதி ஆக்கினால் எமக்கு நல்லது என்று அறிதல் அவசியம்.
'மா புளிப்பது அப்பத்துக்கு நல்லது' என்பது போல சரத் - மஹிந்த சண்டை தற்பொழுது மலிந்து வருவது தமிழ் மக்களுக்கு இழைத்த அனர்த்தங்களையும் அநீதிகளையும் அரங்குக்கு கொண்டு வருவதாக அமையும். விடுதலைப்புலிகளுக்கு வாக்குரிமை வழங்குவது, மறுவாழ்வளிப்பது, மீள்குடியேற்றம், தேர்தலுக்கு பின்னரான வடகிழக்கு இணைப்பு போன்ற தமிழ்மக்களை கவரக்கூடிய பலப்பல வாக்குறுதிகளை மாறி மாறி இருபக்கங்களாலும் அள்ளி வீசப்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் காலம் காலமாக சிங்களத் தலைவர்களால் கூறப்பட்டதும் பின் அள்ளி வீசப்பட்டதும் ஒவ்வொரு தமிழர் நெஞ்சங்களிலும் செதுக்கப்பட்ட வரலாறு. சிங்களத் தலைவர்களால் வழங்கப்படும் வாக்குறுதிகளை தமிழ்மக்கள் நம்பி வாக்குகளை வழங்கக்கூடாது என்பதை அறிதல் வேண்டும். வாக்குறுதிகளுக்காக வாக்குகள் இல்லை எதிரியை இனம்காட்டுவதற்கே வாக்குகள். எதிர்காலத்தில் எப்படியான நிலைப்பாட்டுக்குள் இந்த பொது எதிரிகளை சர்வதேசத்துக்கு முன்னால் கைகட்டி குற்றவாளி ஆக்கவேண்டிய கடமை தமிழ் மக்களுக்கு உண்டென்பதை மனதில் பதித்துக்கொண்டு வாக்குகளை இடவேண்டும்.
தமிழ் மக்களை 'ஆனையாக்குவார்கள்' 'பூனையாக்குவார்கள்' என்றோ பிரதேசங்களை அபிவிருத்தி செய்வார்கள் என்றோ நம்பி தமிழ் மக்கள் தம் வாக்குகளை ஒரு மூடிக்குள் சிறைப்படுத்திவிடல் ஆகாது. அடித்த எதிரிக்கு திருப்பி அடிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது அதை நழுவவிடல் ஆகாது. தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளிக்கொண்டுவருவதற்கு எமக்கான ஒரு சந்தர்ப்பம் வெகு விரைவில் வர இருப்பதை நாம் அறிவோம். இந்த ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் மக்களின் ஒற்றுமையானது தமிழ் மக்களுக்கு இதுவரை காலமும் ஒருவராலும் இழைக்கப்படாத அனர்த்தங்களை ஏற்படுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அரியணை ஏற்றாமல் இருப்பதற்காக அமைதல் வேண்டும்.
தமிழ் மக்களின் தியாகங்களையும், வீரமரணங்களையும் கொச்சைப்படுத்திய அடிவருடித்தலைமைகள் மகிந்தவுக்காக களமிறங்கியுள்ளன. இவர்களால் தமிழ் மக்கள் அநியாயமாக கொல்லப்படும் தருணங்களில் வாய்மூடியிருந்து தமது அடிமைக்கதிரைகளை காப்பாற்றுவதிலே கருத்தாகவிருந்தார்கள். தமிழ் மக்களின் சார்பில் ஒரு கடுகளவேனும் நேர்மையாக இயங்க முடியாதிருந்தார்கள். இவர்களால் மீண்டும் தமிழ் மக்களை காப்பாற்றி சுய கௌரவத்துடன் வாழ வைப்பார்களா? என்பதை தமிழ் மக்கள் உணர்தல் அவசியம்.
தமிழ் மக்களின் கரங்களிலே எதிர்கால ஜனாதிபதி உண்டு.
வாக்குகளை வீணடிக்காமல் பொருத்தமாக வழங்கவேண்டும்.
பொது எதிரியா? புது எதிரியா? தீர்வு உங்கள் கையில்.
ஆசிரியர்கள்
Basel 19 Jan 2010
Thanal
<<வாசலுக்கு